/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
தங்க நகை கடன்: வங்கிகள் மதிப்பாய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு
/
தங்க நகை கடன்: வங்கிகள் மதிப்பாய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு
தங்க நகை கடன்: வங்கிகள் மதிப்பாய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு
தங்க நகை கடன்: வங்கிகள் மதிப்பாய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு
ADDED : மார் 15, 2024 01:55 AM

புதுடில்லி:அண்மைக் காலமாக, தங்க நகை கடன் வழங்குவதில், பொதுத்துறை வங்கிகள் தங்கள் ஆர்வத்தை குறைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதிக சிக்கல்கள் எதுவும் எழாத அடமான கடன்களில், தங்கத்துக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. அதனால், வங்கிகள் நகைக் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுவதில்லை.
ஆனால், சமீப நாட்களாக, நகைக் கடன் கிடைப்பதில் சில சிரமங்கள் இருப்பதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். வங்கிகள் தரப்பிலும், நகைக்கடன் வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை புதிதாக பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
சரிபார்ப்பு
இதற்கிடையே, கடந்த 2022 ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட ஒவ்வொரு தங்க நகைக் கடன் கணக்கையும் மதிப்பாய்வு செய்யுமாறு, அனைத்து பொதுத்துறை வங்கிகளையும், மத்திய நிதி சேவைகள் துறை, பிப்ரவரி 27ம் தேதி எழுதியுள்ள கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு தங்க நகைக் கடன் கணக்குகளின் பிணைய மதிப்பு, வசூல் கட்டணங்களை பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும் என பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்க நகைக்கடன் வழங்குவதில், ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்றாத சம்பவங்கள் மத்திய அரசால் கவனிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, கடன் வழங்குபவர்கள், ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு  'டாப் அப்' கடன்களை வழங்க துாண்டப்பட்டிருக்கலாம் என அரசு தன் கவலையை தெரிவித்துஉள்ளது.
முந்தைய ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டில் தங்க நகைக்கடன் அதிகரித்து உள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலையில் 16.60 சதவீதம் ஏற்றத்துடன் ஒப்பிடுகையில், தங்க கடன்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளன.
தங்க கடன் கணக்குகளில் கட்டணம், வட்டி மற்றும் கணக்கை முடித்தல் ஆகியவற்றில் முரண்பாடுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, தங்க கடன்கள் தேவையான பிணையம் இல்லாமல் வழங்கப்படுவது குறித்து நிதியமைச்சகம் தனது கவலையை தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முரண்பாடு
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிகள் அல்லது தங்க நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், நகைகளின் மதிப்பில் 75 சதவீதத்தை மட்டுமே கடனாக வழங்க முடியும். இருப்பினும், தொற்றுக் காலத்தில் இதற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி தன் சமீபத்திய தணிக்கையில், ஐ.ஐ.எப்.எல்., பைனான்சில், தங்க நகை கடன் கணக்கில் மீறல்கள் இருப்பதைக் கண்டறிந்தது.
கடந்த நிதியாண்டில், ஐ.ஐ.எப்.எல்., வழங்கிய 18.90 லட்சம் தங்க நகை கடன்களில், 82,000 கணக்குகள் கடன் வாங்கியவர்கள் செலுத்தாததால் ஏலத்திற்கு சென்றுள்ளன.
இந்த 82,000 கணக்குகளில், ஏலத்தின் போது 55,000 கணக்குகளில் முரண்பாடுகள் இருப்பதை ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது.
இதையடுத்தே மத்திய நிதியமைச்சகம் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே தற்போது நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் தங்கள் ஆர்வத்தை குறைத்துக் கொண்டுள்ளன.

