/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடியை இழந்தது எச்.டி.எப்.சி., நிறுவனம்
/
ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடியை இழந்தது எச்.டி.எப்.சி., நிறுவனம்
ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடியை இழந்தது எச்.டி.எப்.சி., நிறுவனம்
ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடியை இழந்தது எச்.டி.எப்.சி., நிறுவனம்
ADDED : ஜன 17, 2024 11:40 PM

மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி., நேற்று முன்தினம் அதன் மூன்றாம் காலாண்டுக்கான முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று அதன் பங்குகள் 8 சதவீதம் சரிந்தது. மேலும், வங்கி அதன் சந்தை மதிப்பபிலும் 1 லட்சம் கோடி ரூபாயை இழந்தது.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது வங்கியின் பங்குகள் 12.70 சதவீதம் சரிந்தது. அதன் பின்னர் இதுவே அதிகபட்ச சரிவாகும்.
எச்.டி.எப்.சி., வங்கி, கடந்த ஜூலை மாதம் அதன் தாய் நிறுவனமான எச்.டி.எப்.சி.,யை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் காலாண்டுக்கான ஒருங்கிணைந்த முடிவுகளை, எச்.டி.எப்.சி., வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 2.65 சதவீதம் அதிகரித்து, 17,258 கோடி ரூபாய் எனவும், தனிப்பட்ட நிகர லாபம் 2.48 சதவீதம் அதிகரித்து 16,372 கோடி ரூபாயாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பங்குச் சந்தை வர்த்தகர்களுக்கு அதிக உவப்பானதாக இல்லை. இதைத் தொடர்ந்து, நேற்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்கு சந்தையில், வங்கியின் பங்கு விலை 8.46 சதவீதம் சரிந்து 1,537 ரூபாயாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் பங்குகள் 8.15 சதவீதம் சரிந்து 1,542 ரூபாயாக இருந்தது.
மேலும், வங்கியின் சந்தை மதிப்பும் கிட்டத்தட்ட 1.08 லட்சம் கோடி ரூபாய் சரிந்து, 11.68 லட்சம் கோடி ரூபாய் ஆனது. வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சியில் நிலவும் மந்தநிலை குறித்த கவலை காரணமாகவும் பங்குகள் சரிந்ததாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.