/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கி டெபாசிட்களின் பாதுகாப்பை அறிவது எப்படி?
/
வங்கி டெபாசிட்களின் பாதுகாப்பை அறிவது எப்படி?
ADDED : மார் 16, 2025 07:28 PM

அண்மையில் தனியார் வங்கி ஒன்றின் பங்குகள், தணிக்கை சார்ந்த பிழை காரணமாக திடீரென கடும் சரிவுக்கு உள்ளாகின. இதற்கு சில மாதங்கள் முன், கூட்டுறவு வங்கி ஒன்று பிரச்னைக்கு உள்ளாகி, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டை எதிர்கொண்டது.
கடந்த காலங்களில் பல வங்கிகள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. இவை போன்ற நிகழ்வுகள், வங்கி டெபாசிட்களின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பின்னணியில், வங்கி டெபாசிட்கள்தொடர்பான காப்பீடு குறித்த அடிப்படை அம்சங்களை பார்க்கலாம்.
காப்பீடு பாதுகாப்பு:
பொதுவாக வைப்பு நிதி முதலீடு இடர் குறைந்ததாகவும், பாதுகாப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது. எனினும், குறிப்பிட்ட வங்கியே திவாலாகும் போது, வைப்பு நிதி பாதுகாப்பு என்னாகும் எனும் கவலை எழுவது இயல்பே. இது போன்ற நேரங்களில் காப்பீடு பாதுகாப்பு அளிக்கிறது.
வைப்பு நிதி கவசம்:
ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உறுதி கார்ப்பரேஷன், வைப்பு நிதிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பாதுகாப்பு அளிக்கிறது. வங்கி திவால், மூடல் அல்லது உரிமம் ரத்து போன்ற நிகழ்வுகளில் இது கைகொடுக்கும். அனைத்து வங்கிகளுக்கும் இது பொருந்தும்.
பாதுகாப்பு வரம்பு:
வைப்பு நிதிகளுக்கான காப்பீடு பாதுகாப்பு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை பொருந்தும். வங்கி கணக்கில் உள்ள அனைத்து தொகையையும் இது உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சேமிப்பு தொகை, தொடர் வைப்பு நிதி போன்றவையும் கணக்கில் கொள்ளப்படும்.
விரிவாக்கம்:
நிதி திட்டமிடலில் வலியுறுத்தப்படும் விரிவாக்கம் இதற்கும் பொருந்தும். வைப்பு நிதி காப்பீட்டிற்கு வரம்பு இருப்பதால், ஒரே வங்கியில் பணத்தை போட்டு வைப்பதைவிட ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் வைப்பு நிதி வைத்திருப்பது நல்லது. ஐந்து லட்சம் எனும் வரம்பை மனதில் கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
தொகை அதிகரிப்பு:
காப்பீடு பாதுகாப்பிற்கான தொகையை அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஏற்கனவே 1 லட்சமாக இருந்த பாதுகாப்பு, 2020ம் ஆண்டில் 5 லட்சம்ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.