/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வது ஏற்றதா?
/
சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வது ஏற்றதா?
ADDED : ஏப் 27, 2025 11:51 PM

இடர் குறைந்த தன்மையை நாடும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக, மாறும் விகித சேமிப்பு பத்திரங்கள் அமைகின்றன.
வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கத் துவங்கியுள்ள சூழலில், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு உத்தியை பரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
இடர் குறைந்த தன்மையை நாடும் முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக சீரான வருமானத்தை நாடும் மூத்த குடிமகன்களுக்கு பொருத்தமான முதலீடு வாய்ப்புகளில் ஒன்றாக இந்த பத்திரங்கள் அமைகின்றன.
பாதுகாப்பு அம்சம்
தற்போதைய சூழலில், 8.05 சதவீத வட்டி விகித பலனும், அரசாங்கத்தின் பாதுகாப்பும் கொண்ட இந்த பத்திரங்கள் வைப்பு நிதியை விட கூடுதல் பலனை அளிக்கக்கூடியதாக கருதப்படுகின்றன. அரசாங்கம் சார்பில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் சேமிப்பு பத்திரங்கள், மற்ற பத்திரங்கள் போல அல்லாமல் மாறும் வட்டி விகிதம் கொண்டவை.
தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக 35 அடிப்படை புள்ளிகள் வட்டி கொண்டவை. சிறுசேமிப்பிற்கான வட்டி விகித போக்கிற்கு ஏற்ப இதன் வட்டி விகிதம் அமையும்.
குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாய் மேற்கொள்ளலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு கிடையாது.
சீரான வருமானத்தை நாடும் முதலீட்டாளர்களுக்கு இந்த பத்திரங்கள் ஏற்றவை. வட்டி விகித ஏற்ற இறக்கங்களில் இருந்தும் இவை பாதுகாப்பு அளிப்பவை. இந்த பத்திரங்களில் முதலீடு செய்வதும் எளிதானது. ரிசர்வ் வங்கியின் நேரடி முதலீடு இணையதளம் மூலம் முதலீடு செய்யலாம். இதற்காக பத்திர பதிவேடு கணக்கை துவக்கி கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் முறையில் விண்ணப்பித்து, மின்னணு வடிவில் பராமரிக்கலாம். இதற்கான வட்டி விகித பலன், ஆண்டுக்கு இரு முறை அளிக்கப்படும். இந்த பலனை மொத்தமாக முதிர்வு காலத்திலும் பெற்றுக் கொள்ளலாம். முதலீடு செய்யும் போதே இந்த வாய்ப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.
பணமாக்கல்
இந்த பத்திரங்கள் பாதுகாப்பானவை என்றாலும், ஏழு ஆண்டு கால முதிர்வு கொண்டவை. முன்கூட்டியே விலக்கி கொள்ளும் வாய்ப்பு, நிபந்தனைகளுடன் மூத்த குடிமகன்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முதிர்வு காலம் வரை காத்திருக்க வேண்டும் என்பதால், இவற்றை விரும்பிய நேரத்தில் பணமாக்கிக் கொள்வது சாத்தியம் இல்லை.
எனவே, முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை தேர்வு செய்து கொள்ளும் முன், தங்கள் பணமாக்கல் தேவையை கவனத்தில் கொள்ள வேண்டும். நிதி இலக்குகள் மற்றும் பணமாக்கல் தன்மைக்கு ஏற்ப முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும்.
மற்ற முதலீடுகளில் போதிய பணமாக்கலை உறுதி செய்து, இந்த வாய்ப்பை பரிசீலிப்பது ஏற்றதாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். முதலீடு காலம் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிடும் போது, இதன் சீரான வருவாய் தன்மை சாதகமாக அமையும்.
இந்த பத்திரங்களை மாற்றவோ, விற்கவோ முடியாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். வங்கிகளில் அடமானமும் வைக்க முடியாது. தேசிய சேமிப்பு சான்றிதழ் போல இந்த முதலீட்டின் மீது வரி விலக்கு கோர முடியாது. வட்டி விகித பலன் வரி விதிப்பிற்கு உட்பட்டது.