/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வருமான வரி இணையதளத்தில் 'ரீபண்டு' விபரங்கள் இல்லை: பயனாளிகள் அவதி
/
வருமான வரி இணையதளத்தில் 'ரீபண்டு' விபரங்கள் இல்லை: பயனாளிகள் அவதி
வருமான வரி இணையதளத்தில் 'ரீபண்டு' விபரங்கள் இல்லை: பயனாளிகள் அவதி
வருமான வரி இணையதளத்தில் 'ரீபண்டு' விபரங்கள் இல்லை: பயனாளிகள் அவதி
ADDED : அக் 18, 2025 01:58 AM

சென்னை: வருமான வரித்துறை இணையதளத்தில் அதிகமாக பிடித்தம் செய்யப்படும் வரிக்கான ரீபண்டு விபரங்களை பார்க்கும் வசதி திடீரென மறைக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு வரி செலுத்துவது மற்றும் நிதிசார் கண்காணிப்புகள், மத்திய அரசின் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதற்கு incometax.gov.in என்ற இணையதளம் இயங்கி வருகிறது.
தனிநபர் மட்டுமின்றி தொழில் நிறுவனங்கள் தங்களின் வருமானம் மற்றும் வரி குறித்த விபரங்களை இதில் பதிவேற்றி வருகின்றன.
அரசு நிர்ணயித்த வரம்புக்கு மேல் வருவாய் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ஐ.டி.ஆர்., எனப்படும் படிவங்கள் வாயிலாக, வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயம்.
இதில் வருமான வரம்புக்கு ஏற்ப, ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து டி.டீ.எஸ்., பிடித்தம் செய்யப்படும்.
உதாரணமாக, பணிபுரியும் நிறுவனம் ஊழியரிடம் ஆண்டுக்கு 60,000 ரூபாய் டி.டீ.எஸ்., பிடித்தம் செய்துள்ளது; ஆனால் 50,000 தான் செலுத்த வேண்டிய வரி என்றால், அதற்கு 10,000 ரூபாய் ரீபண்டு வழங்கப்படும்.
இவற்றை வருமான வரியின் இணையதளத்திற்கு சென்று அதன் நிலை குறித்து பார்வையிடலாம்.
ஆனால், கடந்த சில நாட்களாக இந்த வசதி இணையதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தால், எந்த விபரமும் இடம் பெறவில்லை. இதனால் பலர் ரீபண்டு தொகையின் நிலை என்ன என்பது தெரியாமல் குழம்பி வருகின்றனர். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், 'இணையதளம் மேம்படுத்தும் பணிகளின் போது பயனாளிகள் அதிகம் தேர்வு செய்யும் வசதிகள் சில நேரம் மாற்றி அமைக்கப்படும்.
'இருப்பினும், இந்த பிரச்னைகள் தற்காலிகமானவை. உடனடி தகவல் தேவைப்படுவோர் cpc@incometax.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் அனுப்பலாம்' என்றனர்.