/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கியுடன் எஸ்.பி.ஐ., பேச்சு
/
ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கியுடன் எஸ்.பி.ஐ., பேச்சு
ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கியுடன் எஸ்.பி.ஐ., பேச்சு
ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கியுடன் எஸ்.பி.ஐ., பேச்சு
ADDED : பிப் 17, 2024 01:19 AM

புதுடில்லி:பசுமை வைப்புத் தொகைகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை குறைப்பது குறித்து, ரிசர்வ் வங்கியுடன் பேச்சு நடத்தி வருவதாக, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.
ரொக்க இருப்பு விகிதம் என்பது ஒவ்வொரு வங்கியும் தன்னிடம் உள்ள மொத்த வைப்புத் தொகைக்கு எதிராக ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு தொகையாகும்.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி, பசுமை வைப்புத் தொகைகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் 4.50 சதவீதம்.
அதாவது ஒரு வங்கி வைப்புத் தொகையாக பெரும் ஒரு ரூபாய்க்கு ஈடாக 4.50 பைசாவை ரிசர்வ் வங்கியிடம் வழங்க வேண்டும். இந்த தொகைக்கு வட்டி வழங்கப்படாது.
ரிசர்வ் வங்கி, கடந்தாண்டு ஜூன் மாதம், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், பசுமை திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கு முன்பாக, பசுமை வைப்புத் தொகையை திரட்ட வேண்டும் என்று ஒரு புதிய வரையறையை உருவாக்கியது.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் எஸ்.பி.ஐ., 1,111 நாட்கள், 1,777 நாட்கள் மற்றும் 2,222 நாட்கள் தவணைக் காலம் கொண்ட பசுமை வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
சாதாரண வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட, இத்திட்டத்தில் வட்டி விகிதம் 10 அடிப்படைப் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதன் வாயிலாக, பசுமை மற்றும் காலநிலைக்கு உகந்த திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்காக, நீண்டகால சில்லரை வைப்புத் தொகைகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து, எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா தெரிவித்ததாவது:
பசுமை வைப்புத் தொகைகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை குறைப்பது குறித்து, ரிசர்வ் வங்கியுடன் பேச்சு நடத்தி வருகிறோம். மேலும், இதை ரிசர்வ் வங்கியின் ஒழுங்குபடுத்தும் கொள்கையில் இணைப்பது குறித்தும் பேசி வருகிறோம்.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்தும் முன்னெடுப்புகள் இருந்தாலும், மாற்றம் ஏற்பட இரண்டு மூன்று ஆண்டுகள் வரை ஆகக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.