/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
நிதியாண்டின் துவக்கத்தில் முதலீடு ஆய்வு மேற்கொள்ளும் வழிகள்!
/
நிதியாண்டின் துவக்கத்தில் முதலீடு ஆய்வு மேற்கொள்ளும் வழிகள்!
நிதியாண்டின் துவக்கத்தில் முதலீடு ஆய்வு மேற்கொள்ளும் வழிகள்!
நிதியாண்டின் துவக்கத்தில் முதலீடு ஆய்வு மேற்கொள்ளும் வழிகள்!
ADDED : ஏப் 06, 2025 10:06 PM

பொதுவாகவே, நிதியாண்டின் துவக்கம், முதலீடு மற்றும் வரி சேமிப்பு திட்டங்களை ஆய்வு செய்து எதிர்கால பாதையை வகுப்பதற்கு ஏற்ற தருணமாக அமைகிறது. அதிலும் குறிப்பாக, இந்த ஏப்ரல் முதல், வரிவிகிதம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
எனவே, வரி சேமிப்பு உள்ளிட்ட நிதி திட்டமிடல் அம்சங்களை மேற்கொள்வது அவசியம். பொருத்தமான வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதில் துவங்கி, அவசர கால நிதியின் தன்மை, முதலீடுகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
வரிவிதிப்பு முறை:
2025 பட்ஜெட்டிற்கு பிறகு புதிய வருமான வரிவிதிப்பு முறை மேலும் ஈர்ப்புடையதாக மாறியிருக்கிறது. இந்நிலையில், பழைய முறையில் பொருந்தக்கூடிய சலுகைகள், கழிவுகளை கணகிட்டு, இரண்டு முறையில் எது ஏற்றதாக இருக்கும் என தீர்மானிக்க வேண்டும். அலுவலக ஊழியர்கள் இது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
வரி சேமிப்பு:
பழைய முறை ஏற்றதாக இருக்கும் என கருதுபவர்கள், வரி சேமிப்புக்கு பொருந்தக்கூடிய முதலீடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தாமதமாக செயல்படும் போது, தவறாக தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. புதிய முறையை தேர்வு செய்தவர்களும் தங்களுக்கான முதலீடு வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
அவசரகால நிதி:
கைவசம் உள்ள அவசர கால நிதியை ஆய்வு செய்ய வேண்டும். தற்போதைய சூழலுக்கு இந்த நிதி போதுமானதா என்றும் பார்க்க வேண்டும். தேவை எனில் நிதியை அதிகமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதியை பயன்படுத்தியிருந்தால் அதை ஈடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
காப்பீடு பாதுகாப்பு:
ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போதுமானதாக இருக்கிறதா என பரிசீலிக்க வேண்டும். அதே போல, வீட்டுக்கடன் பெற்றிருப்பவர்கள், வட்டி விகித அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கிகளில் சமர்பிக்க வேண்டிய 15- எச் போன்ற படிவங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிதி இலக்குகள்:
முதலீடுகளின் செயல்பாடு நிதி இலக்குகளுக்கு ஏற்ப இருக்கிறதா என்றும் பார்ப்பது அவசியம். வரும் மாதங்களில் பெரிய செலவு செய்யும் சூழல் இருந்தால் அதற்கேற்ப திட்டமிட வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது, நிதி நோக்கிலான கவலைகளை குறைக்க உதவும்.

