/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரிசர்வ் வங்கி பணக்கொள்கை குழுவின் புதிய 3 உறுப்பினர்கள் யார்? காலக்கெடு நெருங்கியும் பெயர் அறிவிக்காத அரசு
/
ரிசர்வ் வங்கி பணக்கொள்கை குழுவின் புதிய 3 உறுப்பினர்கள் யார்? காலக்கெடு நெருங்கியும் பெயர் அறிவிக்காத அரசு
ரிசர்வ் வங்கி பணக்கொள்கை குழுவின் புதிய 3 உறுப்பினர்கள் யார்? காலக்கெடு நெருங்கியும் பெயர் அறிவிக்காத அரசு
ரிசர்வ் வங்கி பணக்கொள்கை குழுவின் புதிய 3 உறுப்பினர்கள் யார்? காலக்கெடு நெருங்கியும் பெயர் அறிவிக்காத அரசு
ADDED : செப் 29, 2024 02:06 AM

புதுடில்லி,:ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு உறுப்பினர்களில், மூன்று பேரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய உறுப்பினர்கள் யார், யார் என்பதை இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.
ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு உறுப்பினர்கள், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, பணவீக்கம், விலை நிலைத்தன்மை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மனதில் கொண்டு, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை அறிவிப்பர்.
வட்டி விகிதம் குறித்த முடிவுகள் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையில் அறிவிக்கப்படும்.
பதவிக்காலம் முடிவு
ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழுவில், மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இடம்பெறுவர். ரிசர்வ் வங்கி கவர்னர் உட்பட மூன்று அதிகாரிகளும்; மத்திய அரசு நியமனம் செய்யும், ரிசர்வ் வங்கியை சாராத மூன்று நிபுணர்களும் குழுவில் இருப்பர். அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள். அப்படி அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஜெயந்த் வர்மா, அஷிமா கோயல், ஷசங்கா பிடே ஆகியோரின் பதவிக் காலம் அக்டோபர் 4ம் தேதியோடு முடிவடைகிறது.
இந்நிலையில், அடுத்த பணக்கொள்கை குழு கூட்டம், வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி துவங்கி, 9ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 9ம் தேதியன்று வட்டி குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். இதனால், புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது.
பொதுவாக, ஆர்.பி.ஐ., பணக்கொள்கை குழுவுக்கு நியமிக்கப்படுவோரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதில்லை என்ற நிலையில், இந்த மூன்று பேரின் இடங்களுக்கு, மத்திய அரசு இதுவரை யார் பெயரையும் அறிவிக்கவில்லை. அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடன் வட்டியை அரை சதவீதம் குறைத் துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் பலவும் வட்டிக் குறைப்பை அறிவித்து வருகின்றன.
இந்தியாவில் கடனுக்கான வட்டி 6.50 சதவீதமாக நீடிக்கும் நிலையில், பணவீக்கமும் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்கு கீழ், அதாவது 3.65 சதவீதமாக உள்ளது.
ரெப்போ குறையுமா?
இதனால், அடுத்த கூட்டத்தில், ரெப்போ விகிதம், குறைந்தபட்சம் கால் சதவீதம் குறைக்கப்படலாம் என பணச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, புதிய உறுப்பினர்கள் யார், வட்டி குறைக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் அனைத்து மட்டங்களிலும் அதிகரித்துள்ளது.