'ஆல்பபெட்' நிறுவன வருவாய் ஒரு வினாடிக்கு ரூ.2.53 லட்சம்
'ஆல்பபெட்' நிறுவன வருவாய் ஒரு வினாடிக்கு ரூ.2.53 லட்சம்
ADDED : மே 22, 2024 11:20 PM

புதுடில்லி:'கூகுள்' நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஆல்பபெட்' நிறுவனம், நடப்பாண்டின் முதல் காலாண்டில், ஒரு வினாடிக்கு, 2.53 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டி உள்ளது.
பணவீக்கம் காரணமாக, ஆல்பபெட் நிறுவனத் தின் நிகர லாபம், கடந்த 2022ல், 35 சதவீதம் குறைந்தது. இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்ச்சி போக்கு வலுவாக இருந்ததை அடுத்து, அதன் அதிகபட்ச நிகர வருவாயை தற்போது பதிவு செய்துள்ளது. அதன்படி, ஆல்பபெட் நிறுவனத்தின் நிகர வருவாய், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 1.95 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு வினாடிக்கு 3,042 டாலர் அதாவது, கிட்டத்தட்ட 2.53 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த 10 ஆண்டுகளில், 615 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 'ஆப்பிள்' மற்றும் 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் வருவாயை விடவும், முறையே எட்டு மற்றும் இரண்டு சதவீதம் அதிகமாகும்.

