'தேர்தலுக்கு பின் பெரிய சவாலாக வேலைவாய்ப்பின்மை இருக்கும்'
'தேர்தலுக்கு பின் பெரிய சவாலாக வேலைவாய்ப்பின்மை இருக்கும்'
ADDED : ஏப் 25, 2024 02:08 AM

புதுடில்லி:உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ள போதிலும், நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருப்பதாக, 'ராய்ட்டர்ஸ்' நிறுவன கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளைவிடவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தாலும், வேலைவாய்ப்பின்மை நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 26 பொருளாதார நிபுணர்களில், 15 பேர், தேர்தலுக்குப் பின், வேலைவாய்ப்பின்மையை சரி செய்வது, அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
எட்டு நிபுணர்கள், கிராமப்புற நுகர்வு பெரிய சவாலாக இருக்கும் என பதிலளித்துள்ளனர். இரண்டு பேர் பணவீக்கத்தையும், ஒருவர் வறுமையையும், இந்தியா எதிர்கொள்ளும் பெரிய சவால்களாக தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்புகள் இல்லாத போதிலும், அரசின் அதிகரித்த மூலதன செலவுகள் காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், கடந்த டிசம்பர் காலாண்டில், 8.40 சதவீதமாக உயர்ந்தது.
இது கடந்த மார்ச் காலாண்டில், 6.50 சதவீதமாக இருந்தது. நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில், முறையே 6.50 மற்றும் 6.70 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

