ADDED : ஏப் 05, 2024 10:53 PM

புதுடில்லி,:எத்தனால் உற்பத்திக்காக, மானிய விலையில் அரிசியை விற்பனை செய்யும் திட்டத்தை மீண்டும் துவக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று, உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நடப்பு 2024 - 25 பருவத்தில், சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், எத்தனால் தயாரிக்கும் ஆலைகளுக்கு மானிய விலையில் அரிசியை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அது குறித்து மறுபரிசீலனை செய்யும் எண்ணமும் இல்லை.
தற்போது மக்காசோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலின் அளவு அதிகரித்து வருகிறது. 2024 - 25ம் வினியோக ஆண்டில், மக்காசோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட 50 கோடி லிட்டர் எத்தனால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எத்தனால் தயாரிப்பவர்கள், மக்காசோளத்தை பயன்படுத்த முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எத்தனால் உற்பத்திக்காக, கடந்த ஆண்டு ஜூலை முதல் அரிசி வழங்கப்படவில்லை. உள்நாட்டு உற்பத்தி மற்றும் சில்லரை விலை உயர்வு குறித்த அச்சம் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு அரசிடமிருந்து அரிசி விற்பனை நிறுத்தப்பட்டது.

