சென்னை நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் முயற்சி நிறுத்தம்
சென்னை நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் முயற்சி நிறுத்தம்
ADDED : மே 29, 2024 01:13 AM

புதுடில்லி: விண்வெளித் துறையில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான, 'அக்னிகுல் காஸ்மோஸ்' நிறுவனத்தின் ராக்கெட் செலுத்தும் சோதனை முயற்சி, நேற்று கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தப்பட்டது.
'அக்னிபான்' என்ற பெயரில், ராக்கெட்டுகளை செலுத்துவதற்காக இந்த நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, நேற்று காலை ராக்கெட்டை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இருப்பினும், விரைவில் இந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு, ராக்கெட் ஏவப்படும் என, அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 22 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில், ராக்கெட் செலுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை பின் கைவிடப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ', இதுவரை 'செமி கிரையோஜெனிக்' இன்ஜினை பயன்படுத்தியது இல்லை, தற்போது தான் அவற்றை உருவாக்கி வருகிறது. ஆனால் இந்நிறுவனம், இந்தியாவிலே முதல் முறையாக செமி கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தியுள்ளது.
சென்னை, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் இருந்து உருவானது, இந்த நிறுவனம். கடந்த, 2017ல், இரண்டு இளம் இன்ஜினியர்களால் துவங்கப்பட்டது.
இவர்களுடைய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் தளத்தில், இந்த நிறுவனத்துக்கென, தனியாக ராக்கெட் ஏவும் தளத்தை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியாவில் தனியார் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட முதல் ராக்கெட்டாக இது இருக்கும். மேலும், செமி கிரையோஜெனிக் இன்ஜினில் இயங்கும் நாட்டின் முதல் ராக்கெட்டாகவும் இருக்கும்.
அத்துடன், 3டி அச்சடிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ஒரு இன்ஜினில் வெற்றிகரமாக இயங்கும் முதல் ராக்கெட்டாகவும் இது இருக்கும்.
இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியாவில் தனியார் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட முதல் ராக்கெட்டாக இது இருக்கும்.