அலுவலக குத்தகைக்கான இடங்கள் சென்னையில் தேவை குறைய வாய்ப்பு
அலுவலக குத்தகைக்கான இடங்கள் சென்னையில் தேவை குறைய வாய்ப்பு
ADDED : மார் 24, 2024 12:32 AM

புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், நாட்டில் அலுவலக குத்தகை பரப்பளவுக்கான தேவை 35 சதவீதம் உயரும் என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'கோலியர்ஸ் இந்தியா' தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான கோலியர்ஸ் இந்தியா, ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, அலுவலக சந்தை குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
அந்நிறுவனம் அதில் தெரிவித்துள்ளதாவது:
தரவுகளின்படி, பெங்களூரு, தேசிய தலைநகர் பகுதி, மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில், மார்ச் காலாண்டில், மொத்த அலுவலக குத்தகை இடங்கள் 136 லட்சம் சதுர அடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 101 லட்சம் சதுர அடியாக இருந்தது.
முக்கிய நகரங்களான ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, தேசிய தலைநகர் பகுதி ஆகிய இடங்களில் தேவை அதிகரிக்கும். ஆனால், சென்னையில் குறைய வாய்ப்புள்ளது. புனேயில் தேவை 8 லட்சம் சதுர அடியாக இருக்கும்.
தரவுகளின்படி, ஹைதராபாதில் அலுவலக குத்தகைக்கு விடப்படும் இடம், ஜனவரி - மார்ச் மாதங்களில் 13 லட்சம் சதுர அடியில் இருந்து, 29 லட்சம் சதுர அடியாக, இரண்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையில், தேவை 10 லட்சம் சதுர அடியில் இருந்து 19 லட்சம் சதுர அடியாக 90 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் 32 லட்சம் சதுர அடியில் இருந்து 40 லட்சம் சதுர அடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புனேவில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி 8 லட்சம் சதுர அடியாக உள்ளது.
இந்த மதிப்பீட்டு காலத்தில், சென்னையில் அலுவலக தேவை 6 சதவீதம் குறைந்து, 15 லட்சம் சதுர அடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 16 லட்சம் சதுர அடியுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

