சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தம் இழப்பீடு கேட்கிறது கூட்டமைப்பு
சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தம் இழப்பீடு கேட்கிறது கூட்டமைப்பு
ADDED : ஏப் 02, 2024 11:13 PM

புதுடில்லி:சுங்கக் கட்டணங்களை மாற்றியமைப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என என்.எச்.பி.எப்., என்னும் தேசிய நெடுஞ்சாலை அமைப்பாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவிருந்த மாற்றியமைக்கப்பட்ட சுங்கக் கட்டணங்களை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலை அமைப்பாளர்கள் கூட்டமைப்பின் இயக்குனர் ஜெனரல் பி.சி., குரோவர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவருக்கு கடிதம் வயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுங்கக் கட்டண திருத்தத்தை ஒத்திவைத்திருப்பதால், கூட்டமைப்புக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இழப்பை எதிர்கொள்ளும் உறுப்பினர்களுக்கு, தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், மாற்றியமைக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தை, ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் தேதி முடிவடைந்ததும் வசூலிக்கலாமா அல்லது ஒரு குறிப்பிட்ட நாள் முதல் நாடெங்கும் அமல்படுத்தப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 855 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 675 சுங்கச்சாவடிகள் பொதுநிதி வாயிலாகவும்; 180 கட்டுமான கூட்டமைப்பாலும் நிர்வகிக்கப்படுகின்றன.
மொத்த விலை பணவீக்கத்துக்கு ஏற்ப சுங்கக் கட்டணங்களை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைப்பது வழக்கம் என்றும், கட்டணங்கள் சராசரியாக ஐந்து சதவீதம் உயரக்கூடும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

