ADDED : ஆக 14, 2024 11:26 PM

புதுடில்லி: சத்தீஸ்கரில் லித்தியம் கனிமத்தை தோண்டி எடுப்பதற்கான சுரங்கம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அப்படி அமையும்பட்சத்தில் இது இந்தியாவின் முதல் லித்திய சுரங்கமாக இருக்கும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், மருந்து, உயர் ரக எலக்ட்ரானிக்ஸ், தொலைதொடர்பு போன்ற துறைகளின் தயாரிப்பில், அரிய வகை கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
தற்போது நம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய, இந்த கனிமங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில், லித்தியம் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இதனால், லித்தியத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கட்கோராவில், இந்திய புவியியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், 250 ஹெக்டேர் பரப்பளவில் லித்தியம் செறிவுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மேலும், எம்.எஸ்.டி.சி., போர்ட்டல் வாயிலாக பீஹார், குஜராத், ஜார்க்கண்ட், ஒடிசா, தமிழகம், உ.பி., ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில், 20 அரிய வகை கனிம வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை பிரித்தெடுக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், சத்தீஸ்கரின் கட்கோராவில் உள்ள லித்தியம் மற்றும் அரிய தனிமங்களும் அடங்கும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.