ADDED : செப் 18, 2024 12:24 AM

புதுடில்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஆகஸ்டில் 1.31 சதவீதமாக குறைந்துள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைந்ததே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில் 2.04 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஆகஸ்டில் மைனஸ் 0.46 சதவீதமாகவும் இருந்தது.
நடப்பாண்டில், தொடர்ந்து இரண்டா வது மாதமாக கடந்த ஆகஸ்டில் குறைந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் 3.45 சதவீதமாக இருந்த உணவுப் பிரிவு பணவீக்கம், கடந்த மாதம் 3.11 சதவீதமாக குறைந்தது. உருளை மற்றும் வெங்காயம் தவிர, பிற காய்கறி களின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது.
எரிபொருள் மற்றும் எரிசக்தி பிரிவில் பணவீக்கத்துக்கு மாறாக பணவாட்டமே நிலவியது. எனினும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஜவுளி பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் பழங்களில் பணவீக்கம் அதிகரித்திருந்தது.
