ADDED : ஆக 14, 2024 11:22 PM

புதுடில்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜூலையில் 2.04 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் குறிப்பாக, காய்கறிகளின் விலை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 3.36 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஜூலையில் மைனஸ் 1.23 சதவீதமாகவும் இருந்தது. கடந்த ஜூன் மாதம் காய்கறிகளில் பணவீக்கம் 38.76 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் காய்கறிகளில் பணவாட்டம் 8.93 சதவீதமாக இருந்தது.
தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் வெங்காயத்திலும் பணவீக்கம் குறைந்தது.
இதன் காரணமாக, ஒட்டுமொத்த உணவுப் பிரிவு பணவீக்கம் ஜூன் மாதத்திலிருந்த 10.87 சதவீதத்திலிருந்து கடந்த மாதம் 3.45 சதவீதமாக குறைந்தது. அதே வேளைவில், தயாரிப்பு பொருட்களில் 1.58 சதவீதமாகவும்; எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் 1.72 சதவீதமாகவும் அதிகரித்தது.