சோலார் மின் உற்பத்தியாளர்களை தவிக்க விடும் மின்வாரியம்
சோலார் மின் உற்பத்தியாளர்களை தவிக்க விடும் மின்வாரியம்
ADDED : மார் 26, 2024 10:15 PM

சோலார் மின் உற்பத்தி செய்தும், இணைப்பு வழங்குவதற்கு மின்வாரியம் ஒத்துழைக்க மறுப்பதால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 1,000 மெகா வாட் சோலார் மின்சாரம் கிடைப்பது, தாமதமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கோடையால், தமிழகத்தின் மின்தேவை 19,000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு மெகாவாட் சோலார் மின் உற்பத்திக் கட்டமைப்பை வைத்து, ஒரு நாளுக்கு ஐந்து மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
தமிழகம் முழுதும் 200 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி கட்டமைப்பில் இருந்து, மின் வாரியத்துக்கு மின்சாரம் கொடுப்பதற்கான இணைப்பான, எல்.சி., வழங்க முடியாத நிலை, பல மாதங்களாக நீடிக்கிறது.
வரும் 31க்குள், இதை கமிஷனிங், அதாவது இணைக்க வேண்டிய கட்டாயத்தில், சோலார் மின் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
அதற்கு, ஒவ்வொரு பகுதியிலும் துணைமின் நிலையத்தில் இரண்டு மணி நேரம் அளவுக்கு மின்தடை செய்ய வேண்டும். ஆனால், தேர்வு நேரம் என்பதை காரணம் காட்டி, கடந்த பல நாட்களாக எல்.சி., செய்வதற்கு, மின் தடை செய்ய மின் வாரியம் மறுத்து வந்தது.
இப்போது தேர்தல் காரணமாக, மக்களிடம் அதிருப்தி ஏற்படுமென்று, மின்தடை செய்து, எல்.சி., செய்வதற்கு அனுமதிக்க மறுத்து வருகிறது.
இதன் காரணமாக, 1,000 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, சோலார் மின் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு மெகாவாட் மின் உற்பத்திக்கும், தலா, ஐந்து கோடி ரூபாய் வீதமாக, 200 மெகா வாட் சோலார் மின் உற்பத்திக்கு 1,000 கோடி ரூபாய் வரை, சோலார் மின் உற்பத்தியாளர்கள் செலவழித்துள்ளனர்.
எல்.சி., கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, தமிழகத்துக்கு கூடுதலாகக் கிடைக்க வேண்டிய, 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதும் தடைபடுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக, மின் வாரியத்தலைவர் உட்பட உயரதிகாரிகளுக்கும், தமிழக சோலார் மின் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பலமுறை மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
- நமது சிறப்பு நிருபர் -

