புதிய வகை காது கேட்கும் கருவி அறிமுகம் செய்தது 'ஸ்டார்கீ'
புதிய வகை காது கேட்கும் கருவி அறிமுகம் செய்தது 'ஸ்டார்கீ'
ADDED : மே 14, 2024 06:51 AM

புதுடில்லி : செவித்திறன் கருவிகள் தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் இயங்கி வரும் 'ஸ்டார்கி' நிறுவனம், 'ஜெனிசிஸ் ஏ.ஐ.,' என்ற தன் புதுமையான காது கேட்கும் கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 1967ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்ட ஸ்டார்கி நிறுவனம், உலகம் முழுதும் 29 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இந்திய பிரிவு, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கடந்த 2007ம் ஆண்டில் துவக்கப்பட்டது. தற்போது இந்தியாவில், ஐந்து கிளைகளுடன் இயங்கி வருகிறது.
புதிய காது கேட்கும் கருவி குறித்து நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 6.30 கோடிக்கும் அதிகமானோர், காது கேட்கும் திறனில் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, எங்கள் நிறுவனம் சார்பில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய காது கேக்கும் கருவியான ஜெனிசிஸ் ஏ.ஐ.,யை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்து, அதில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியதை அடுத்து, இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம்.
ஒலிகளை மிகத்துல்லியமாக கேட்கவும், பயனாளர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்வும் உதவக்கூடிய வகையில் தனிப்பட்ட புதிய அனுபவத்தை இக்கருவி வழங்குகிறது.
இதில் உள்ள மேம்பட்ட 'ஸ்டார்கி நியூரோ பிராஸசர்' கேட்கும் திறனை ஆறு மடங்கு அதிகரிக்கிறது. இதுவரை கேட்டிராத துல்லியமான ஒலி அனுபவத்தை தருகிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால், 51 மணி நேரம் பயன்படுத்தும் வகையில், ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இதில் உள்ளது.
மேலும், இரைச்சலைக் குறைத்து, பல்வேறு சூழல்களில் தெளிவாக பேச்சை புரிந்து கொள்வதற்கான மேம்பட்ட ஒலி செயல்பாடுகளை உறுதி செய்கிறது.
காதுகளில் வசதியாக பொருந்தும் வகையில் இலகுவான வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
