ADDED : ஏப் 05, 2024 11:22 PM

புதுடில்லி:இந்தியா அடுத்த ஆண்டுக்குள் யூரியா இறக்குமதியை முற்றாக நிறுத்திவிடும் என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
பயிர் உற்பத்தியை அதிகரிக்க, கடந்த 60 முதல் 65 ஆண்டு காலமாக, நாடு ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகிறது-.
மண் ஆரோக்கியத்திற்கும், பயிர் வளர்ச்சிக்கும் மாற்று உரங்கள் நல்லது என்பதால், அரசு அவற்றை ஊக்குவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நானோ திரவ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி., எனப்படும் நானோ திரவ டி - அம்மோனியம் பாஸ்பேட் போன்ற மாற்று உரங்களை ஊக்குவிக்க, அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், யூரியா இறக்குமதியை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர, அரசு புதிய உத்திகளை கடைப்பிடித்துள்ளது. அதில் ஒன்று, மூடப்பட்ட நான்கு யூரியா ஆலைகளை அரசு தற்போது புதுப்பித்து வருகிறது-.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, ஆண்டுக்கு 350 லட்சம் டன் யூரியா தேவைப்படுகிறது-.
உள்நாட்டு உற்பத்தி திறன் வாயிலாக, 2014 - 15ல் 225 லட்சம் டன் தயாரிக்கப்பட்டது. தற்போது 310 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 40 லட்சம் டன் பற்றாக்குறையாக உள்ளது-. ஐந்தாவது ஆலை துவங்கப்பட்ட உடன், உற்பத்தி 325 லட்சம் டன்னாக அதிகரிக்கும். அத்துடன் 20 முதல் 25 லட்சம் டன் யூரியாவுக்கு பதிலாக, நானோ திரவ யூரியாவை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2025ம் ஆண்டு இறுதிக்குள் நாடு இறக்குமதியை சார்ந்திருப்பது முடிவுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

