வரிகளை முற்றிலும் நீக்க இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம்
வரிகளை முற்றிலும் நீக்க இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம்
ADDED : மார் 06, 2025 11:29 PM

புதுடில்லி:வேளாண் பொருட்கள் தவிர்த்து, மற்ற அனைத்து பொருட்களுக்குமான வர்த்தகத்தில், வரிகளை முற்றிலும் நீக்குமாறு இந்தியாவை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து, ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கூடுதல் வரி விதிப்பை தவிர்க்குமாறு, இந்திய தரப்பில் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், அமெரிக்காவில் தற்போது முகாமிட்டு அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்.
இந்த சூழலில், ஏப்ரல் 2 முதல் புதிய வரி அமலாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பதுடன், இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில், வேளாண் பொருட்கள் நீங்கலாக, மற்ற அனைத்து பொருட்களுக்கும் வரியை நீக்குமாறு இந்தியாவை அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளதாக, செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகள் வரிவிதிப்பில் நியாயமின்றி நடந்து கொள்வதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அமெரிக்க அரசின் கூடுதல் வரி மற்றும் வரியை நீக்கச் சொல்லி கொடுக்கும் அழுத்தம் ஆகியவற்றுக்கு, இந்தியா என்ன பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.