'அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் தாக்கம் ஏற்படும்'
'அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் தாக்கம் ஏற்படும்'
ADDED : மார் 07, 2025 11:45 PM

விசாகப்பட்டினம்,:அமெரிக்க வரிகளின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மேலும் கூறியதாவது:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின், புதிய வர்த்தகக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்கா பரஸ்பரம் வரிகளை அமல்படுத்தும் என்றும், அமெரிக்க பொருட்கள் மீது பிற நாடுகள் விதிக்கும் அதே வரிகளை பிற நாட்டு பொருட்களுக்கும் அமெரிக்கா வசூலிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வரி விதிப்பின் தாக்கமானது இந்தியாவிலும் உணரப்படும். நமது நாட்டின் நலன்களை பாதுகாக்கும் விதமாக, மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான வர்த்தக அமைச்சகத்தின் பிரதிநிதிகள் அமெரிக்காவுடன் விரிவாக பேச்சு நடத்தி வருகின்றனர். அதன் முடிவுகள் எப்படி அமையும் என பார்க்க வேண்டும்.
வருமான வரிக்கான புதிய முறைகள், வரி செலுத்தும் முறையை எளிதாக்கியுள்ளது. மேலும், புதிய வரி விலக்குகள், அடுக்குகள் வாயிலாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மேலும் குறையும். மத்திய, மாநில அரசுகளால் கூட்டாக மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும், எந்த பற்றாக்குறையும் இல்லாமல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.