தென்னை நார் உற்பத்தி நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவிக்கு ரூ.14 கோடி
தென்னை நார் உற்பத்தி நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவிக்கு ரூ.14 கோடி
ADDED : அக் 20, 2024 02:17 AM

சென்னை:சிறு தொழில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் தென்னை நார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவ, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியில், சர்வதேச போட்டியை எதிர்கொள்ளும் வகையில், நிறுவனங்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க உள்ளது.
தேங்காய் மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் தென்னை நார், தென்னை நார் துகள் ஆகியவற்றிலிருந்து மிதியடி, தரை விரிப்பு, கலைப் பொருட்கள் உட்பட பல மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தென்னை நார் பொருட்களுக்கு அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. நம் நாட்டில் இருந்து தென்னை நாரை அதிகம் வாங்கும் சீனா, அதில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம், சிறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த, 'ரேம்ப்' எனப்படும் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்ட பணிகளை தமிழகத்தில் செயல்படுத்த, 165 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது. அதில், தென்னை நார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு உதவ, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியில், சர்வதேச போட்டியை எதிர்கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி உள்ளிட்ட உதவிகள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து, கோவை தென்னை நார் உற்பத்தியாளர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், “தென்னை நாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பான சமீபத்திய தொழில்நுட்பம் குறித்து, தமிழக நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
“இதனால் அந்த பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்ய முடியும்.” என்றார்.