ஆந்திராவில் தொழில் பூங்காக்கள் ஒரே நாளில் 15 திறப்பு; 35க்கு அடிக்கல்
ஆந்திராவில் தொழில் பூங்காக்கள் ஒரே நாளில் 15 திறப்பு; 35க்கு அடிக்கல்
ADDED : நவ 11, 2025 11:00 PM

கனிகிரி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒரே நாளில் 15 சிறு, குறு, நடுத்தர தொழில் பூங்காக்களை துவக்கியும் 35 தொழில் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் பெட்டேர்ல பாடு என்ற இடத்தில் தொழில் பூங்கா ஒன்றை துவக்கி வைத்த அவர், மாநிலத்தின் 17 மாவட்டங்களில் 50 இடங்களில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் பூங்காக்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பங்கேற்றார்.
இதுகுறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சிறுதொழில்களுக்கான பூங்காக்களின் இரண்டாவது கட்டமாக 329 ஏக்கரில் 15 பூங்காக்களை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்துள்ளார்.
அதேபோல, 587 ஏக்கரில் அரசு மற்றும் தனியாரால் இயக்கப்படவுள்ள 35 தொழில் பூங்காக்கள் அமைக்க, அடிக்கல் நாட்டி யுள்ளார். மொத்தம் 25 தொழில் துறைகள் 25,256 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தில் இடம்பெறுகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது:
தொழில் பூங்காக்களில் மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகளை ஏற்படுத்த, மையப்படுத்தப்பட்ட வசதியை உருவாக்கி வருகிறோம். ஒரு நல்ல தொழில் யோசனையுடன் வருவோர், உடனடியாக ஆந்திராவில் தொழில் தொடங்கலாம்.
விரைவில் குவாண்டம் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்யும் கேந்திரமாக ஆந்திரா உருவெடுக்கும். டிரோன்களை தயாரிக்கும் ஒர்வக்கல் பகுதியில் தான் ஆப்பரேஷன் சிந்துாரில் பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

