ADDED : டிச 23, 2024 12:21 AM

புதுடில்லி:ஒற்றை சாளர முறையில், கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி வரை, 4.81 லட்சம் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அன்னிய நேரடி முதலீடு, பெட்ரோலியத் துறை, ஹால்மார்க்கிங் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்வது உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அனுமதி வழங்கும் முறைகளை, ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக, தேசிய ஒற்றை சாளர அனுமதி போர்ட்டல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 14 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் வாயிலாக, இதுவரை 1.46 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்; 12.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தயாரிப்புகள்; 4 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி; 9.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஆகியவை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

