ஏற்றுமதி சரிவால் 50% தறிகள் மூடல்: 1,000 கோடி ரூபாய் ஜவுளி தேக்கம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் கவலை
ஏற்றுமதி சரிவால் 50% தறிகள் மூடல்: 1,000 கோடி ரூபாய் ஜவுளி தேக்கம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் கவலை
ADDED : நவ 27, 2025 12:12 AM

நாமக்கல்;''உற்பத்தி செய்த ஜவுளி ரகங்கள், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு தேக்கமடைந்துள்ளதால், 50 சதவீத விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன,'' என, நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செயலர் காசி பெருமாள் கூறியதாவது:
தமிழகத்தில், நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர், தருமபுரி உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், விசைத்தறி, நெசவு தொழில் பிரதானமாக உள்ளது. சில ஆண்டுகளாக ஜவுளி தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஜவுளி ஏற்றுமதியில் பிற நாடுகளுடன் போட்டி போட முடியாத நிலையில் நம் நாடு உள்ளது. சாயக்கழிவு பிரச்னை, ரகங்கள் கட்டுப்பாடு சட்டம், ஜி.எஸ்.டி., அடிக்கடி நுால் விலை ஏற்றத்தாழ்வு, ஆள் பற்றாக்குறை போன்றவையே இதற்கு காரணம்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளிகளுக்கு, நவீன விசைத்தறிகளில் துணி தயார் செய்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக வெளிநாட்டு ஆர்டர் குறைந்தது. அதனால், நவீன விசைத்தறியில் உள்நாட்டு தேவைகளான டவல், துண்டு போன்ற ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால், சாதாரண விசைத்தறியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தீபாவளிக்கு பின், நாமக்கல் மாவட்டம் முழுதும், 50 சதவீத விசைத்தறி கூடங்கள் மூடிக்கிடக்கின்றன. நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உற்பத்தியாகும், டவல், தளபதி வேட்டி, பட்டு வேட்டி, பட்டு சேலை, பெட்சீட், ஜமுக்காளம், போர்வை, காடா பீஸ்கள் என, தமிழகம் முழுதும், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு தேக்கமடைந்துள்ளன.
மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்தி, வெளிநாட்டுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மேலும், தமிழக அரசு, 1.80 கோடி ரேஷன் கார்டுகளுக்கு வழங்கும் வேட்டி, சேலையுடன், இரண்டு டவல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துண்டு , தளபதி வேட்டி, பட்டு வேட்டி, பட்டு சேலை, பெட்சீட், ஜமுக்காளம், போர்வை, காடா பீஸ்கள் தேக்கம்
தீபாவளிக்கு பின், நாமக்கல் மாவட்டம் முழுதும், மூடிக்கிடக்கும் 50 சதவீத விசைத்தறி கூடங்கள்
ரேஷன் கார்டுகளுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலையுடன், இரண்டு டவல்களை வழங்க வலியுறுத்தல்

