ADDED : பிப் 14, 2024 01:39 AM

புதுடில்லி:இஸ்ரேலின், 'டவர் செமிகண்டக்டர்' நிறுவனம், 66,400 கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் ஆலையை இந்தியாவில் அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அமைக்க உள்ள ஆலையின் வாயிலாக, 65 நானோ மீட்டர் மற்றும் 40 நானோ மீட்டர் வகை செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தொழிற்சாலையை அமைப்பதற்கான ஊக்கத் தொகை மற்றும் பிற சலுகைகளை மத்திய அரசிடமிருந்து இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
கடந்தாண்டு அக்டோபரில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திர சேகர், டவர் செமிகண்டக்டர் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியான ரசல் சி எல்வாங்கரை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்பட்டது.
இந்தியாவில் இந்த ஆலை எங்கு அமைய உள்ளது என்பது குறித்து, இன்னும் அறிவிக்கவில்லை. பெரும்பாலும் கர்நாடகா மாநிலமாக இருக்கலாம் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இஸ்ரேலை சேர்ந்த, 'டவர் செமிகண்டக்டர்' நிறுவனம், ஆலை அமைப்பதற்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகளை அரசிடம் எதிர்பார்க்கிறது.

