பனம்பழ நாரில் இருந்து நுால் நெசவுத்தொழிலில் ௸புதிய முயற்சி
பனம்பழ நாரில் இருந்து நுால் நெசவுத்தொழிலில் ௸புதிய முயற்சி
ADDED : ஆக 07, 2025 02:35 AM

பல்லடம்:திருப்பூர் தொழில் துறையினர் ஒத்துழைப்புடன், சேலத்தைச் சேர்ந்த மில் உரிமையாளர் ஒருவர், பனம்பழத்தில் இருந்து நுால் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு உள்ளார்.
சேலத்தை சேர்ந்த ஸ்பின்னிங் மில் உரிமையாளர் தினகரன், 56, என்பவர் கூறியதாவது:
பனம்பழத்தின் நார்களைப் பயன்படுத்தி, பருத்தியுடன் இணைத்து நுால் தயாரிக்கிறோம். 10 சதவீதம் பனம்பழம், 90 சதவீதம் பருத்தியிழை என்ற விகிதத்தில் நுால் தயாரித்து, அவற்றை, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள ஒரு ஜவுளி உற்பத்தி நிறுவனம் மூலம், 'பிராசசிங்' செய்தோம்.
பின், திருப்பூரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவன உதவியுடன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால், கூடுதல் விலை கொடுத்து, கைத்தறி நுால்கள் இறக்குமதி செய்யும் தேவை இருக்காது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முதல் கட்டமாக, சிறிய அளவில் தயாரிப்பை மேற்கொண்டுள்ளோம். இதை, பதப்படுத்துவது, எளிமையாக்குவது உள்ளிட்ட வழிமுறைகளுடன், அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல, புதிய தொழில்நுட்பங்கள் தேவை.
பனம்பழங்கள், தென் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன. புதிய தொழில்நுட்பத்தால் பனை விவசாயிகள் அதிகம் பயனடைவதுடன், வேலைவாய்ப்பும் பெருகும். இதற்கு அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.