துணைமின் நிலையம் அமைப்பதில் தனியாரை கவனிக்க தனி நிறுவனம்
துணைமின் நிலையம் அமைப்பதில் தனியாரை கவனிக்க தனி நிறுவனம்
ADDED : நவ 03, 2025 11:37 PM

சென்னை: தமிழகத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் திட்ட செலவு கொண்ட துணைமின் நிலையங்கள் அமைக்க, தனியாருக்கும் வாய்ப்பளிக்கும் பணிகளை மேற்கொள்ள, 'ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யூடிலிட்டி' எனப்படும் மாநில மின் தொடரமைப்பு நிறுவனத்தை, மின் வாரியம் உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, 765 கிலோ வோல்ட், 400 கி.வோ, 230 கி.வோ., ஆகிய அதிக திறன் உடைய துணைமின் நிலையங்களுக்கு, மின்சாரத்தை அதே திறனிலான மின் வழித்தடங்களில் மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் தொடரமைப்பு கழகம் எடுத்துச் செல்கிறது.
அனுமதி இத்திட்டங்கள், 'டெண்டர்' கோரி தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக அமைக்கப்படுகின்றன.
அதிக திறன் உடைய துணைமின் நிலையங்கள், மின் வழித்தட திட்டங்களில் தனியார் முதலீடுகளை ஈர்க்க, மத்திய மின் துறை அனுமதி அளித்து யள்ளது.
எனவே, கட்டண அடிப்படையிலான போட்டி, ஏல முறையில், 'டெண்டர்' கோர தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது.
இந்த டெண்டரில் தனியார் நிறுவனங்கள், மத்திய - மாநில அரசு மின் தொடரமைப்பு கழகங்கள் உட்பட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். குறைந்த விலைப்புள்ளி வழங்கி தேர்வாகும் நிறுவனம், தன் செலவில் மின் திட்டத்தை செயல்படுத்தி, தானே பராமரிக்க வேண்டும்.
லாபம் அதை பயன்படுத்துவதற்கான, 'வீலிங் சார்ஜ்' உள்ளிட்ட கட்டணங்களை, யூனிட் அடிப்படையில் மின் தொடரமைப்பு கழகம் வழங்கும். இதன் வாயிலாக, முதலீடு செய்யும் தனியாருக்கு லாபம் கிடைக்கும்.
இதற்காக, 'டெண்டர்' பணிகளை பொதுவான முறையில் மேற்கொள்ள தற்போது மாநில மின் தொடரமைப்பு நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தை, மின் வாரியம் உருவாக்கிஉள்ளது.

