ADDED : மே 26, 2026 03:54 AM
கோவை: குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை சரி செய்வதற்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையில் வெட் கிரைண்டர், பம்ப் மோட்டார் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஏராளமான நெருக்கடிகளில் சிக்கி தவிப்பதால், இப்பிரச்னைக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ்:
மத்திய - மாநில அரசுகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் குறைவான பட்ஜெட் ஒதுக்குகின்றனர். குறு நிறுவனங்கள் மிகவும் குறைவாகத்தான் பயனடைகின்றன.
எனவே, மத்திய - மாநில அரசுகள் இரண்டுமே குறு நிறுவனங்களுக்கு தனி அமைச்சகங்களை உருவாக்க வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவகுமார்:
மாவட்ட தொழில் மையம் வாயிலாக வழங்கும் மானியத்தை கடந்த 3 ஆண்டுகளாக வழங்குவதில்லை. குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டும். குறுந்தொழில் பூங்கா அமைக்க அரசு உதவ வேண்டும்.
சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோஸியேஷன் (சியா) தலைவர் தேவகுமார்:
கோவையில் 20,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வர்த்தகம் 1 கோடி ரூபாயை தாண்டவில்லை. அவர்களின் பிரச்னையையும், 15 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரச்னையையும் எப்படி ஒன்றாக கையாள முடியும்? இந்த துறைக்கு தனி ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
