sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஆயிரம் சந்தேகங்கள்

 ஆயிரம் சந்தேகங்கள்

 ஆயிரம் சந்தேகங்கள்


ADDED : மே 04, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 05:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேஸ்புக் வாயிலாக லண்டனை சேர்ந்த ஒருவர் நண்பர் ஆனார். அவருடைய மகளுடைய பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எனக்கு ஷூக்களும் பரிசு பொருட்களும் அனுப்புவதாக சொல்லி, முகவரி வாங்கி கொண்டார். பின்னர் பேச்சு வாட்ஸாப்புக்கு நகர்ந்தது. இப்போது, தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக எனக்கு 2 லட்சம் டாலர்களை அனுப்பி வைக்கிறேன் என்கிறார். அவரது எண்ணை சோதித்தபோது, அது நைஜீரியா என்று காட்டியது. என்ன செய்வது?

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

அறிமுகமே இல்லாத நபர் உங்கள் முகவரியை கேட்டால் கொடுப்பதா? இந்த காலத்தில் நெருங்கிய உறவினர்களே, இவ்வளவு பணம் கொடுக்க தயங்குவர், இருக்கட்டும். இது பல ஆண்டுகளாக இணையத்தில் நடந்து வரும் மிக பிரபலமான 'பார்சல் மோசடி'. லண்டனில் இருப்பதாக கூறிக்கொண்டு, நைஜீரிய எண்களில் பேசுவது இவர்களின் நிரந்தரமான உத்தி.

ஓரிரு நாட்களில் உங்களுக்கு சுங்கத்துறையிலிருந்து பேசுவதாக கூறி ஒரு போலி அழைப்பு வரும். 'உங்கள் பெயரில் வந்துள்ள பார்சலில் 2 லட்சம் டாலர் உள்ளது; இது சட்டவிரோதம். பார்சலை விடுவிக்க உடனடியாக 50,000 அல்லது 1 லட்சம் ரூபாய் வரியாக அபராதமாக கட்ட வேண்டும்' என்று மிரட்டுவர். போலி வங்கிக் கணக்குகளை அனுப்பி பணத்தை பறிப்பதே இவர்களின் முழு நோக்கம்.

அந்த நபரை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் 'ப்ளாக்' செய்து விடுங்கள். சுங்கத்துறை அதிகாரி, காவல் துறை என்று யார் போன் செய்து மிரட்டினாலும் பயப்பட வேண்டாம். அரசு அதிகாரிகள் யாரும் போனில் மிரட்டி தனிநபர் கணக்கிற்கு பணம் அனுப்ப சொல்ல மாட்டார்கள். போனை துண்டித்துவிட்டு அந்த எண்களையும் ப்ளாக் செய்யுங்கள்.

பார்சல் ஏதேனும் வந்தால், 'இது என்னுடையது அல்ல' என்று திருப்பி அனுப்பி விடுங்கள். எந்த காரணத்தை கொண்டும் ஒரு ரூபாய் கூட யாருக்கும் அனுப்ப வேண்டாம்.

என் கிரெடிட் ஸ்கோரை பார்த்தபோது, கடந்த 2006 முதல் 58 கடன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், இரண்டு மட்டுமே நான் வாங்கிய வீட்டுக்கடன். மற்றவை எல்லாம் வேறு யாருடையதோ. பெயரும், பிறந்த விபரங்களும் மட்டும் ஒன்றாக இருக்கின்றன. அந்த மனிதர் கடனாக வாங்கித் தள்ளியிருக்கிறார். ஒருசிலவற்றை திரும்பச் செலுத்தியிருக்கிறார். மற்றவற்றில் டிபால்டராக இருந்துள்ளார். என் கிரெடிட் ஸ்கோர் மிக மோசமாக அடிவாங்கி உள்ளது.

- கே. வெங்கடேஷ், பெங்களூரு

பான் எண் முழுமையாக கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு, அதாவது, 2006 காலகட்டத்தில், பெயரும் பிறந்த தேதியும் ஒன்றாக இருப்பவர்களின் தரவுகளை சிபில் போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக ஒன்றாக இணைத்திருக்கலாம். அல்லது யாரோ ஒருவர் உங்கள் பான் அட்டையின் நகலை மோசடியாக பயன்படுத்தி வெவ்வேறு வங்கிகளில் இந்த கடன்களை வாங்கியிருக்கலாம்.

முதலில் சிபில் வலைத்தளத்திற்கு செல்லுங்கள். அதில் 'புகார் தீர்வு' என்ற பகுதி இருக்கும். அதில் ஆன்லைன் வாயிலாக 56 கடன்களையும் தேர்ந்தெடுத்து, 'இது என்னுடைய கணக்கு இல்லை' என்று புகார் கொடுங்கள். சிபில் நிறுவனம் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் விசாரித்து 30 நாட்களுக்குள் உங்கள் அறிக்கையிலிருந்து தவறான கடன்களை நீக்கிவிடும்.

அந்த கிரெடிட் அறிக்கையிலேயே அந்த 56 கடன்களும் எந்தெந்த வங்கிகளால் அல்லது நிதி நிறுவனங்களால் கொடுக்கப்பட்டன என்ற தகவல் இருக்கும். அந்த வங்கிகளின் குறைதீர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி, 'என் பெயரையும் பான் எண்ணையும் பயன்படுத்தி உங்கள் வங்கியில் மோசடியாக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக விசாரியுங்கள்' என்று எழுத்துப்பூர்வமாக புகார் செய்யுங்கள்.

ஒருவேளை இது பான் கார்டு மோசடியாக இருக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் காவல் துறை அல்லது வங்கி தரப்பில் இருந்து எந்த சட்டச் சிக்கலும் உங்கள் மேல் வராமல் இருக்க, உடனடியாக 1930 என்ற எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தளத்திலோ 'அடையாளத் திருட்டு' குறித்து ஒரு புகாரைப் பதிவு செய்து ஒப்புகை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

வீடு கட்டுவதற்காக என் மருமகள் பொதுத் துறை வங்கியில் 86 லட்சம் கடன் வாங்கினார். என் பெயரில் பவர் ஆப் அட்டர்னி இருக்கிறது. இதில், 40 லட்சம் எடுத்து மனை வாங்கிவிட்டோம். இரண்டு வருடங்களில் வீடு கட்ட வேண்டும் என்று நிபந்தனை. ஆனால், அவர்களுக்கு விசா பிரச்னையால் இந்தியா வர முடியவில்லை. இன்னும் ஆறு மாதங்களில் வீடு கட்ட வேண்டும். இல்லையென்றால், மீதமுள்ள 46 லட்சத்துக்கு 17 சதவீத வட்டி கட்ட வேண்டும். அதாவது, 9 பிளஸ் 17, மொத்தம் 26 சதவீத வட்டி கட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். இது உண்மையா? இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

- எஸ். ராஜேந்திரன், கோவை

நீங்கள் சொல்லும் கணக்கில் ஏதோ பிழை இருக்கிறது. எந்த பொதுத்துறை வங்கியும் 26 சதவீத வட்டியெல்லாம் வாங்காது. குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு கட்டவில்லை என்றால், நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனை, 'கமர்ஷியல் கடன்' அல்லது 'த னிநபர் கடன்' ஆக மாற்றிவிடுவர். அதற்கான வட்டி 13 முதல் 15 சதவீதம் வரை இருக்கும். அத்துடன் விதிமீறலுக்காக ஒரு 2 சதவீத அபராத வட்டி போடப்படலாம். ஆக மொத்தம் 15 முதல் 17 சதவீதம் வரை மட்டுமே வட்டி வரும்.

மேலும், மீதமுள்ள 46 லட்சத்துக்கு நீங்கள் வட்டி கட்ட வேண்டாம். அந்தபணத்தை இன்னும் நீங்கள் வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளவே இல்லையே. வங்கி அதை தானாகவே ரத்து செய்துவிடும்.

நீங்கள் மூன்று விஷயங்களை செய்யலாம். உங்களிடம் தான் 'பவர் ஆப் அட்டர்னி' இருக்கிறது என்பதால், நீங்களே அந்த கட்டடத்தை எழுப்பும் முயற்சியில் இறங்கலாம். நீங்கள் பேஸ்மென்ட் போட்டுவிட்டாலே, வங்கி கட்டுமானத்துக்கான முதல் தவணை தொகையை விடுவித்துவிடும்.

அல்லது, உங்களால் நேரடியாக ஓடியாடி அலைய முடியாது என்று தோன்றினால், வங்கி கிளையில் போய் விபரம் சொல்லி, மேலும் ஆறு முதல் ஓராண்டு வரை கால அவகாசம் கேளுங்கள், கொடுப்பார்கள். வீடு கட்டும் ஐடியாவையே கைவிட்டு விட்டீர்கள் என்றால், அப்போதும் வங்கிக்கு போய், வாங்கிய 40 லட்சத்தை மனை வாங்குவதற்கான 'ப்ளாட் லோனாக' மாற்றிக்கொள்ளுங்கள். இதற்கு வட்டி சற்று அதிகமாக இருக்கலாம், ஆனால், வீடு கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us