ADDED : நவ 26, 2024 06:09 AM

புதுடில்லி; அதானி குழுமம் மீதான 'ஹிண்டன்பர்க்' குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் நிறைவு செய்துவிட்டதாக, 'செபி' தெரிவித்துள்ளது. இதையடுத்து செபி, விரைவில் இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்கள், உண்மைக்கு மாறாக, தன் பங்குகளின் விலையை அதிகரித்து, முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனால், அப்போது அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து, 12.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்தது.
இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இவ்விவகாரம் குறித்த 24 விசாரணையில், இரண்டு மட்டும் நிலுவையில் இருப்பதாக, செபி தெரிவித்து இருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வர்த்தக நடவடிக்கை தொடர்பான விசாரணைகளும் இதில் அடங்கும். மேலும், இது தொடர்பாக, ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு, செபி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் தற்போது 24 விசாரணைகளும் முடிவுற்றுள்ளன.
இதையடுத்து, எவையெல்லாம் விதிமீறல் என்பது குறித்த இறுதி விசாரணை அறிக்கையை, செபி விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
