சீன கோழிப்பண்ணை இயந்திரங்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வேண்டும்
சீன கோழிப்பண்ணை இயந்திரங்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வேண்டும்
ADDED : ஜூன் 20, 2026 06:20 AM

உள்நாட்டு தொழில்துறையினர் வலியுறுத்தல்
புதுடில்லி: சீனாவிலிருந்து இறக்குமதியாகும் கோழிப்பண்ணை இயந்திரங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்று, இந்திய கோழிப்பண்ணை இயந்திர தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்திஉள்ளது.
சி.ஐ.ஐ., சார்பில் டில்லியில் நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், கோழித்தீவன தயாரிப்பாளர்கள், கோழிப்பண்ணை இயந்திர தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், இந்திய கோழிப்பண்ணை இயந்திர தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உதய் சிங் பயாஸ் பேசியதாவது:
கோழி வளர்ப்பு தொழில், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆண்டுக்கு 2.70 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்கிறது; 50 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
கோழி கூண்டுகள், குஞ்சு பொரிப்பான்கள், தீவன தட்டுகள், முட்டை தரம் பிரிப்பான்கள் ஆகியவை சீனாவிலிருந்து இறக்குமதியாகின்றன. இவை மிகவும் தரம் குறைந்தவையாகவும், 6 மாதங்கள்கூட உழைக்காதவையாகவும் உள்ளன.
சீனா இயந்திர இறக்குமதி, நம் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை சேர்ந்த இயந்திர தயாரிப்பாளர்களுக்கு சவாலாக உள்ளது.
இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். சீன இயந்திரங்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிப்பது அல்லது தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
