'மேற்காசியாவுக்கு ஏப்., 15 முதல் கூடுதல் சிறிய சரக்கு கப்பல்கள்'
'மேற்காசியாவுக்கு ஏப்., 15 முதல் கூடுதல் சிறிய சரக்கு கப்பல்கள்'
ADDED : மார் 10, 2026 02:08 AM

புதுடில்லி: மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக அந்த பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சரக்கு கப்பல் போக்குவரத்து கட்டணம் 300 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், சிறிய கப்பல்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேங்கியுள்ள சரக்குகளை விரைவாக அனுப்ப ஏதுவாக, வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிக எண்ணிக்கையிலான சிறிய கப்பல்களை இயக்க முடிவு செய்துள்ளதாக, இந்திய ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து துறை இயக்குநருடனான ஆலோசனை கூட்டத்துக்கு பின், கூட்டமைப்பின் பொது இயக்குநர் அஜய் சஹாய் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள் 300 சதவீதம் வரை கூடுதல் கட்டணங்களை விதித்துள்ளதால், சரக்கு போக்குவரத்து கட்டணம் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் கட்டணம் இந்திய மதிப்பில் 1.38 லட்சம் ரூபாய் முதல் 3.68 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வான்வழி போக்குவரத்து கட்டணங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன.
உதாரணமாக, கொல்கட்டா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையேயான சரக்கு விமான கட்டணம் கிலோவுக்கு 190 ரூபாயிலிருந்து, 430 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான சிறிய கப்பல் போக்குவரத்து சேவையை, வரும் ஏப்ரல் 15 முதல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
