ADDED : செப் 23, 2026 03:44 AM

சர்வதேச அரிசி மாநாட்டில் இடம்பெறும் 200 ரகங்கள்
வரும் அக்., 23 முதல் 25ம் தேதி வரை டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச அரிசி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் இத்தாலியின் அர்போரியா, தாய்லாந்து மல்லி, ஜப்பானின் சுஷி, இந்தியாவின் பாஸ்மதி, நவரா, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி, துப்ராஜ், காலாநாமக், ஜோஹா, சின்னோர், முஷ்பட்ஜி உள்ளிட்ட 200 அரிசி ரகங்கள் இடம் பெற உள்ளன. ஒவ்வொரு அரிசியின் தனித்தன்மை, தோற்றம், சத்துகள் உள்ளிட்டவற்றை சர்வதேச வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் இதற்கென மாநாட்டில் 9 பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த அரிசி காட்சிபடுத்தல் வாயிலாக சர்வதேச வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் புதிய ரகங்களை வாங்கி வினியோகம் செய்யும், புதிய சந்தைகளுக்கு அரிசி நுழையவும் வாய்ப்புகள் உருவாகும் என இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தாய்லாந்துக்கு பூச்சிக்கொல்லி விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்
தாய்லாந்தின் பூச்சிக்கொல்லி மருந்து எச்ச அளவு விதிகளை மசாலா மற்றும் மசாலா பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இந்திய நறுமண பொருள் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மசாலா பொருட்கள் அடங்கிய சில சரக்குகளில், அந்நாட்டு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சிக்கொல்லி மருந்து எச்சம் அதிகமாக இருந்ததாக தாய்லாந்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் செப்., 8ம் தேதி தெரிவித்துள்ளது. இதையடுத்து, தாய்லாந்துக்கு மசாலா மற்றும் மசாலா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், அந்நாட்டில் நடைமுறையில் உள்ள பூச்சிக்கொல்லி எச்ச அளவு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
'ஒரே நாடு; ஒரே உரிமம்' உர நிறுவனங்கள் கோரிக்கை
உர உற்பத்திக்கான உரிமம் மற்றும் மாநில அளவிலான சந்தைப்படுத்தல் அனுமதிகளை எளிமைப்படுத்தும் வகையில் 'ஒரே நாடு; ஒரே உரிமம்' என்ற டிஜிட்டல் நடைமுறையை உருவாக்க வேண்டும் என இந்திய நுண் உர உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுதும் உர உற்பத்தி மற்றும் விற்பனை உரிமங்களுக்கான தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்க வேண்டும். உர நிறுவனங்களின் ஆவணங்கள், உற்பத்தி விபரங்கள், தயாரிப்பு தகவல்கள், தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் சட்டரீதியான ஆவணங்களை ஒருமுறை மட்டுமே பாதுகாப்பான தேசிய டிஜிட்டல் தளத்தில் பதிவேற்ற வேண்டும். இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை தவிர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
கடந்த ஜூலையில் அதிகரித்த பாதாம் ஏற்றுமதி
சர்வதேச பாதாம் வர்த்தகத்தில் கடந்த ஜூலையில் வேகம் காணப்பட்டது. ஆசிய பாதாம் ஏற்றுமதி கடந்த ஜூலையில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவின் பாதாம் இறக்குமதி கடந்த ஜூலையில் 20 சதவீதமாகவும், ஏற்றுமதி 35 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், மார்ச் முதல் ஜூலை வரையிலான ஒட்டுமொத்த ஏற்றுமதி 12 சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை மாத ஏற்றுமதி, நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச மாதாந்திர அளவாகும்.
ஐரோப்பிய சந்தையின் சில பகுதிகளில் தேவை அதிகரித்துள்ளது. ஜூலையில் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தை வேகமாக மீண்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளிலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
