அலுமினிய கேன் பற்றாக்குறை பானங்கள் தயாரிப்பு பாதிப்பு
அலுமினிய கேன் பற்றாக்குறை பானங்கள் தயாரிப்பு பாதிப்பு
ADDED : ஏப் 22, 2026 04:31 AM

புதுடில்லி: மேற்காசிய போர்ச்சூழலை அடுத்து, அலுமினிய இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டதால், கேனில் அடைத்து விற்கப்படும் பானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அத்துறையினர் கூறியதாவது:
மேற்காசிய போர் பதற்றம் நீடிப்பதால், அலுமினிய மூலப்பொருள் இறக்குமதி குறைந்துள்ளது. இதையடுத்து, பல்வேறு பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அலுமினிய கேன்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது.
கேன்கள், இதர மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவும் இறக்குமதி செலவை அதிகரித்துள்ளது.
எரிவாயு பற்றாக்குறை காரணமாக அலுமினிய கேன் தயாரிப்பாளர்களால், ஒப்புக்கொண்ட ஆர்டரை தர இயலாது என்று கூறும் நிலை உள்ளது.
மேலும், வெளிநாட்டு இறக்குமதி கேன்களின் விலையும் அதிகமாக உள்ளது.
இவ்வாண்டின் துவக்கத்தில் இறக்குமதி கேன்களுக்கு பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு சலுகை வழங்கப்பட்டது.
தற்போதைய நிலையில், பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சற்றே விலையை உயர்த்தி கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் அல்லது கலால் வரியில் சலுகை அளிக்க வேண்டும். இன்றைய நிலையில், அரசு கைகொடுக்காவிட்டால் சிறு தயாரிப்பாளர்கள் தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
