ADDED : நவ 14, 2025 12:05 AM

புதுடில்லி வியட்நாமிலிருந்து அதிக ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க, பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
வெப்பம் ஏற்றப்பட்ட மற்றும் கலப்பு உலோகத்திலான ஸ்டீல், வியட்நாமிலிருந்து மலிவு விலையில் நம் நாட்டில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, உள்நாட்டு ஸ்டீல் தொழிலை கடுமையாக பாதிக்கும் என புகார் எழுந்தது.
இறக்குமதியை கட்டுக்குள் வைக்க, வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குநர் அலுவலகம் பொருட்குவிப்பு தடுப்பு வரிவிதிக்க ஆணையிட்டதாக கூறியுள்ளது. அதன் பரிந்துரையை நிதியமைச்சகம் ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இயக்குநகரத்தின் அறிவிப்பின்படி, ஹோவா பட் டங் குவாட் ஸ்டீல் நிறுவனம் தவிர, அனைத்து வியட்நாம் ஸ்டீல் ஏற்றுமதியாளர்களும் ஒரு டன் ஸ்டீலுக்கு 10,700 ரூபாய் வீதம் இந்திய ரூபாயில் வரி செலுத்த வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் வியட்நாமிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தாலும் அவர்களுக்கும் இந்த வரி பொருந்தும்.

