தொடரும் சைபர் தாக்குதல்களால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
தொடரும் சைபர் தாக்குதல்களால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 06:54 PM

புதுடில்லி: வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பன்னாட்டு நிதியம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வங்கி மற்றும் நிதி சேவைகள் அதிகளவில் இணையதளங்களை சார்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனால், வங்கிகள் மட்டுமின்றி அவற்றுடன் இணைந்த பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
பெரிய வங்கி அல்லது முக்கிய பணப்பரிவர்த்தனை அமைப்பு தாக்குதலுக்கு உள்ளானால், பணம் அனுப்புதல், பெறுதல், வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன் படுத்துதல் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப் படலாம். இதன் தாக்கம் மற்ற நிதி நிறுவனங்களுக்கும் பரவி, கடன் வழங்கும் நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சைபர் தாக்குதல்களை மேலும் நுட்பமாக நடத்த பயன்படுத்தப்படலாம். அதேநேரம், தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
பல வங்கிகள் ஒரே தொழில்நுட்ப சேவை நிறுவனங்களை சார்ந்திருப்பதும் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட்டால், பல வங்கிகளின் சேவைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப் படலாம்.
எனவே, சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தி, தாக்குதல் ஏற்பட்டாலும் முக்கிய நிதி சேவைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
