ADDED : செப் 17, 2026 06:52 AM

புதுடில்லி: நடப்பு 2026 - 27 நிதியாண்டின் முதல் காலாண்டில் பாஸ்மதி அரிசியின் விலை 15 - 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் அரிசி விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என, அரிசி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2025ம் ஆண்டு நெல் அறுவடை எதிர்பார்த்ததைவிட வேகமாக நடந்ததால், அக்., மாத புதிய வரத்து தொடங்கும் முன்பே அரிசி கையிருப்பு குறைந்துள்ளது.
இதனால், உள்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் உள்ளது.
இதுகுறித்து அரிசி வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'அடுத்த காரீப் பருவ நெல் அறுவடை தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ளன. எனவே, குறுகிய காலத்துக்கு அரிசி விலை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
'புதிய பயிர் வரத்து அதிகரிப்பது, வெளிநாடுகளில் அரிசிக்கான தேவை குறைவது ஆகியவற்றை பொறுத்தே விலை குறைய வாய்ப்புள்ளது.
அதுவரை, அரிசி விலை அதிகமாகவே நீடிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.
'நடப்பு 2026 - 27 நிதியாண்டின் முதல் காலாண்டில் பாஸ்மதி அரிசியின் விலை 15 - 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பாஸ்மதி அல்லாத அரிசியின் விலை 20 - 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க - ஈரான் போர்ச்சூழலை அடுத்து, பல்வேறு உலக நாடுகள் தங்கள் உணவுப்பொருள் வினியோகத்தை உறுதிசெய்ய, அதிக அளவில் அரிசியை வாங்கி குவித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
