UPDATED : அக் 09, 2026 05:17 PM
ADDED : அக் 09, 2026 05:10 PM
அரசுத் திட்டத்தின் மூலம் கடன் கிடைக்கிறது என்பதற்காக உடனே கடன் வாங்கிவிடக் கூடாது. கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருக்கிறதா என்பதையும் கணக்கிட வேண்டும்.
மாதச் செலவு எவ்வளவு? உற்பத்திச் செலவு என்ன? பொருளை எவ்வளவு விலைக்கு விற்க முடியும்? மாதம் எவ்வளவு விற்பனை தேவை? கடன் தவணையைச் செலுத்திய பிறகு எவ்வளவு தொகை மீதமாகும்?
இந்தக் கணக்குகள் தெளிவாக இருந்தால், கடன் சுமையாக இல்லாமல் தொழில் வளர்ச்சிக்கான கருவியாக மாறும்.
சிறிய தொடக்கம்
தொழில் என்றாலே பெரிய கட்டிடம், அதிக இயந்திரங்கள், ஏராளமான தொழிலாளர்கள் என்ற அவசியம் இல்லை. பல தொழில்கள் சிறிய அளவில் தொடங்கி, வாடிக்கையாளர்களை உருவாக்கி, பின்னர் விரிவடைந்துள்ளன.
அரசின் உதவியைப் பெறுவதற்கு முன்பாகவே தொழில்முனைவோர் தன்னுடைய தொழில் திட்டத்தைத் தெளிவாகத் தயாரித்துக் கொள்ள வேண்டும். தொழில் என்ன, யாருக்காக, எவ்வளவு முதலீடு, வருமானம் எப்படி வரும் என்பதற்கான பதில் அதில் இருக்க வேண்டும்.
வாய்ப்பைத் தேடுபவர்களுக்கு...
தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இன்று பல துறைகளில் உள்ளன. உற்பத்தி, உணவுப் பொருட்கள், சேவைகள், பழுது பார்த்தல், வீட்டுத் தொழில்கள், வேளாண்மையைச் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் என பல துறைகளில் புதிய முயற்சிகளுக்கு இடம் இருக்கிறது.
அரசுத் திட்டங்கள் கதவைத் திறக்க உதவலாம். ஆனால் அந்தக் கதவுக்குள் சென்று தொழிலை நடத்த வேண்டியது தொழில்முனைவோர்தான்.
கையில் இருக்கும் பணம் குறைவாக இருக்கலாம். ஆனால், திட்டம் தெளிவாக இருந்தால் வாய்ப்புகள் குறைவாக இருக்க வேண்டியதில்லை.
