ADDED : ஏப் 08, 2025 11:56 PM

பெங்களூரு:ராணுவ அமைச்சகம், 2,210 கோடி ரூபாய் மதிப்பில், எலக்ட்ரானிக் போர்க் கருவிகளை கொள்முதல் செய்ய, மத்திய பொதுத்துறை நிறுவனமான 'பெல்' என்ற 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
விமானப்படையின் 'எம்.ஐ., - 17வி5' என்ற நடுத்தர ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களின் ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு திறனை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்த எலக்ட்ரானிக் போர்க்கருவிகளை 'டி.ஆர்.டி.ஒ.,' என்ற 'ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு பிரிவான 'போர் விமான அமைப்புகள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையம்' உருவாக்கி உள்ளது. இதை, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
ரேடார் எச்சரிக்கை கருவி, ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு மற்றும் எதிரி ஏவுகணைகளை திசை திருப்பும் அல்லது தாக்கி அழிக்கும் அமைப்பு ஆகியவை, இதில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இது, விமானப்படை ஹெலிகாப்டர்களின் போரிடும் திறனை மேம்படுத்தும்.
