
ஒப்பந்தம்
நாட்டின் ஸ்டார்ட் அப் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, வாகன உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறையில் தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை வழங்க, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மாருதி சுசூகி நிறுவனம் ஆதரவளிக்கும். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இதில் பயன்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்
கடந்த 2024ல், இந்திய டிஜிட்டல் பொருளாதாரம், செயலி வெளியீட்டாளர்களுக்கு கூகுள் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு தளம் வாயிலாக 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்து இருப்பதாக, பொருளாதார ஆலோசனை நிறுவனமான பப்ளிக் பர்ஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 லட்சம் பேருக்கு மேல் வேலை கிடைத்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் அதிகளவில் பதிவு செய்த டெவலப்பர்கள் எண்ணிக்கையில், 10 லட்சத்துக்கு மேற்பட்டோருடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
அறிமுகம்
இந்திய வாடிக்கையாளர்கள், இனி யு.பி.ஐ., வாயிலாகவே வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பவும், வெளிநாட்டு மின்னணு வர்த்தக தளங்களில் வாங்கும் பொருட்களுக்கு பேமென்ட் மேற்கொள்ளவும் ஏதுவாக, புதிய வசதியை பே பால் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 'பே பால் வேர்ல்டு' என்ற சேவையை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து, பே பால் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது யு.பி.ஐ., வாயிலாகவே வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பலாம். அதே போல பே பால் பேமென்ட் சேவை வழங்கும் வர்த்தக தளங்களிலும் யு.பி.ஐ., கொண்டே எளிதாக பேமென்ட் செய்யலாம்.
கூட்டு
வாகன உதிரிபாக தயாரிப்பாளரான மிண்டா கார்ப்பரேசன் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த குவால்கம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கார் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக, மேம்பட்ட டிஸ்பிளே, ஆடியோ, கம்ப்யூட்டிங் வசதிகளை குவால்கம்மின் ஸ்நாப்டிராகன் காக்பிட் தளம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.