வாங்குவோர் - விற்போர் சந்திப்௸பு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்
வாங்குவோர் - விற்போர் சந்திப்௸பு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்
ADDED : நவ 14, 2025 10:59 PM

சென்னை, தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க உதவும் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும், 'பேம் டி.என்.,' நிறுவனம், ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் உள்ள முத்து மஹாலில் நேற்று நடத்தியது. இன்றும், இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதை, தமிழக தொழில் வணிக ஆணையர் நிர்மல் ராஜ் துவக்கி வைத்தார்.
வாங்குவோர் - விற்போர் சந்திப்பில், ரஷ்யா, மலேஷியா, மொரீஷியஸ், கானா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த, 42 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் ஆயத்த ஆடை, உணவு பதப்படுத்துதல், வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டுதல், தென்னை நார் பொருட்கள், தோல் பொருட்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள, 620 தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
இவர்களிடம், வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்களின் தேவை தொடர்பான விபரங்களை விரிவாக தெரிவித்தனர். அதற்கு ஏற்ப, தமிழக நிறுவனங்களும் பொருட்களை விற்க ஆர்வம் காட்டின.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் தேவை இருந்தும் எப்படி விற்பது என தெரிவதில்லை.
இதற்காகவே, இரு தரப்பினரும் நேரடியாக சந்திக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்தபடியே, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து, 'ஆர்டர்கள்' பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

