ஜி.எஸ்.டி., குறைப்பில் பாரபட்சம் அட்டை பெட்டி தயாரிப்பாளர்கள் புகார்
ஜி.எஸ்.டி., குறைப்பில் பாரபட்சம் அட்டை பெட்டி தயாரிப்பாளர்கள் புகார்
ADDED : செப் 21, 2025 12:04 AM

கொல்கட்டா:சமீபத்திய ஜி.எஸ்.டி., மாற்றங்களால், தங்கள் தொழிலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கிழக்கு இந்திய அட்டை பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கிழக்கு இந்திய அட்டை பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்துக்கு பின், அட்டை பெட்டிகளுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான மூலப்பொருட்களான கிராப்ட் பேப்பர் மற்றும் போர்டு ஆகியவற்றின் மீதான வரி, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த முரண்பாடு, அட்டை பெட்டி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 13 சதவீத கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக, அவற்றின் இருப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொழிலில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் 70 லட்சம் டன் கிராப்ட் பேப்பர், அட்டை பெட்டிகளாக தயாரிக்கப்படுகின்றன.
மூலப்பொருட்களை வாங்கும்போதே அதிக வரி செலுத்துவதால், உள்ளீட்டு வரி பயன் தேக்கம் அதிகரிக்கும். இதனால், நிறுவனங்களின் பணப்புழக்கம் பாதிக்கப்படும்.
ஒப்பந்த தொழிலாளர், வாடகை, பழுதுபார்ப்பு போன்ற செலவுகள் 18 சதவீதம் வரையிலும், சரக்கு போக்குவரத்து செலவு 5 சதவீதம் வரையிலும் அதிகரிக்கும். அட்டை பெட்டிகளின் விலை 5 முதல் 7 சதவீதம் வரை அதிகரித்து, நுகர்வோர் தான் பாதிக்கப்படுவர்.
அட்டை பெட்டிகள் மற்றும் இதன் மூலப்பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., சதவீதத்தை சமநிலைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.