காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை அழுத்தத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம்
காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை அழுத்தத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம்
ADDED : செப் 09, 2025 03:35 AM

புதுடில்லி, : கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, பல்வேறு வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் அமைப்புகள், மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
ஏற்கனவே கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த காலக்கெடுவை, செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு மற்றும் தரவு குளறுபடிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி நிலவரப்படி, நேரடி வரிகள் வாரியத்தில் பதிவு செய்துள்ள தனி நபர்களில், 4.89 கோடி பேர் மட்டுமே வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 4.63 கோடி கணக்குகள் மட்டுமே சரி பார்க்கப்பட்டுள்ளது; 3.35 கோடி கணக்குகள் மட்டுமே கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேரடி வரிகள் வாரியத்தில் மொத்தம் 13.35 கோடி தனிநபர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கர்நாடகா, குஜராத், மஹாரஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள தொழில் மற்றும் பட்டயக் கணக்காளர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளதாவது:
வருமான வரி தாக்கல் செய்வதற்கான மென்பொருள் அமைப்புகள் நடப்பாண்டு தாமதமாக வெளியிடப்பட்டன. அதே நேரத்தில், போர்ட்டலிலும் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வரி தாக்கல் செய்வதற்கான பணிச்சுமையும் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது.
ஆண்டு தகவல் அறிக்கை, வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் மற்றும் படிவம் 26 ஏ.எஸ்., ஆகியவற்றில் தொடர்ந்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. மேலும், அதிகபட்ச பயன்பாட்டு நேரங்களில் லாக் - இன் செய்ய முடியாமல் போவது; நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது போன்ற பிரச்னைகளும் உள்ளன.
மென்பொருள் அமைப்புகள் தாமதமாக வெளியிடப்பட்டதால், வரி தாக்கல் செய்ய தயாராவதற்கு குறைவான கால அவகாசமே கிடைத்தது. இவை தவிர நிதித் தரவுகளில் ஏற்படும் முரண்பாடுகள், திருத்தப்பட்ட நடைமுறையின் கீழ் பணிச்சுமை அதிகரிப்பு ஆகிய சிக்கல்களும் உள்ளன. எனவே வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப கோளாறு மற்றும் தரவு குளறுபடிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது