மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: தமிழக பா.ஜ., அறிக்கை சமர்ப்பிப்பு
மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: தமிழக பா.ஜ., அறிக்கை சமர்ப்பிப்பு
ADDED : டிச 31, 2025 01:22 AM

சென்னை: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக, தமிழக பா.ஜ., தொழில் துறை வல்லுநர் அணி, பொருளாதார அணி மற்றும் தொழில் அணி ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக பா.ஜ., அனைத்து பிரிவுகளின் பொறுப்பாளர் ராகவன் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, ஆடிட்டரும், தமிழக பா.ஜ., தொழில் துறை வல்லுநர் அணி தலைவருமான எஸ்.சுந்தர் ராமன் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக, தமிழகத்தில் உள்ள தொழில் துறையினர், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர், வணிகர்கள் என, பல்வேறு துறை சார்ந்த நபர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவற்றை பகுப்பாய்வு செய்தும், பா.ஜ., சார்பிலும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், நேரடி வரி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக தனிநபர் தொழில்கள், கூட்டு நிறுவனங்களுக்கு தனியாக எளிமைப்படுத்தப்பட்ட வரி அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி.,யில் கட்டுமான பொருட்களுக்கான வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்து, பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்களுக்கு தெளிவான வரி வழிகாட்டுதல்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித்துறையில் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பயிற்சி, தேர்வு சேவைகள் உள்ளிட்ட கல்வி சார்ந்த சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு வழங்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், மின் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் துறைகளில் சுங்க வரி சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்; உள்நாட்டு உற்பத்தி மற்றும் விலை குறைப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

