50,000 டன் ஆர்கானிக் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
50,000 டன் ஆர்கானிக் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
ADDED : ஜன 01, 2026 01:07 AM

புதுடில்லி: ஒரு நிதியாண்டில் 50,000 டன் வரை, ஆர்கானிக் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு நிதியாண்டுக்கு 50,000 டன் ஆர்கானிக் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னர், கட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த ஆர்கானிக் சர்க்கரை, தற்போது ஏற்றுமதி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஏற்றுமதியானது, 2023ம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையில் மேற்கொள்ளப்படும். மேலும், ஏற்றுமதிக்கான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எனும் 'அபெடா' நிர்ணயம் செய்யும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் முடிவுக்கு, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆர்கானிக் சர்க்கரையை கட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து நீக்கி, அதற்கு ஒரு குறிப்பிட்ட ஏற்றுமதி அளவை நிர்ணயித்ததன் வாயிலாக, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கும், ஆலை உரிமையாளர்களுக்கும் ஒரு புதிய லாபகரமான வாய்ப்பை அரசு உருவாக்கி உள்ளதாக அச்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

