பாக்ஸ்கான் விவகாரம் ஆப்பிளிடம் மாற்றுவழி உள்ளது மத்திய அரசு நம்பிக்கை
பாக்ஸ்கான் விவகாரம் ஆப்பிளிடம் மாற்றுவழி உள்ளது மத்திய அரசு நம்பிக்கை
ADDED : ஜூலை 11, 2025 11:19 PM

புதுடில்லி:இந்தியாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் இருந்து சீன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நாடு திரும்பிய சிக்கலை கையாள, ஆப்பிள் நிறுவனத்திடம் மாற்று வழிகள் இருப்பதாக, அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உள்ளிட்ட இந்திய பாக்ஸ்கான் ஆலைகளில் உற்பத்தியை நிர்வகித்து வந்த நுாற்றுக்கணக்கான சீன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவனத்தின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சென்றனர்.
இது வரவிருக்கும் ஐபோன் 17 மாடல், இந்தியாவில் உற்பத்தியாவதை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
மொபைல் போன்கள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான உபகரணங்கள் சீனாவில் இருந்து பெறப்படுகின்றன. மேலும், இவற்றைக் கையாளுவதில் சீன தொழில்நுட்ப வல்லுனர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
இந்தியாவின் பாக்ஸ்கான் ஆலைகளில் பணியாற்றிய சீனப் பொறியாளர்கள், அசெம்பிளி லைன், தொழிற்சாலை வடிவமைப்பு மற்றும் ஐபோன் உற்பத்திக்கான கருவிகள் மற்றும் இயந்திரங்களை திறமையாக கையாளுவதற்கான பயிற்சிகளை அளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது இவர்கள் வெளியேறுவதை அடுத்து, இவ்விவகாரம் குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இந்த சிக்கலை கையாளுவது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் மாற்று வழிகள் உள்ளதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்பிரச்னை ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களுக்கு இடையேயானது என்றும் அரசு கருதுகிறது. சீன தொழிலாளர்களுக்கான விசாக்களை, மத்திய அரசு எளிதாக்கிஉள்ளது.
எனவே, உற்பத்தியில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்திலிருந்து, நுாற்றுக்கணக்கான சீன பொறியாளார்கள் நாடு திரும்பியதை அடுத்து, ஐபோன் 17 உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது

