ADDED : நவ 14, 2025 12:26 AM

ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி: ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை சரியான தருணத்தில் ஒப்புதல் அளித்து, பட்ஜெட் அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதால், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நம் நாட்டு நிறுவனங்கள், உலகளாவிய சந்தையில் நிலவும் வர்த்தக போட்டிகளை எதிர்கொண்டு, வாய்ப்புகளை வசப்படுத்த ஏதுவாக, மத்திய பட்ஜெட் 2025 - 26ல் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு 2025 - -26 முதல் 2030 - 31ம் ஆண்டு வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கு 25,060 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்; இதன் துணை திட்டம் வாயிலாக, ஏற்றுமதி தரம் மேம்பாடு, பிராண்டிங், வர்த்தக கண்காட்சிகள், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதிசாராத ஆதரவுகள் அளிக்கப்படும்.
இது குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி. துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், “இந்திய ஜவுளித்துறைக்கு ஏற்பட்ட சமீபத்திய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நிதியுதவி அறிவித்ததற்காக, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
''மத்திய அரசின் இந்த அறிவிப்பால், இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறன் மேலும் அதிகரிக்கும்,” என்றார்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புதிய ஏற்றுமதியாளர்கள், வேலைவாய்ப்பு மிகுந்த துறைகளை ஆதரிக்கும் திட்டம்
ஜவுளி, தோல், வைரம் மற்றும் நகை, பொறியியல், கடல் உணவு துறைகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை
ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை பாதுகாத்து, புதிய சந்தை வாய்ப்புகளை ஈர்க்க கைகொடுக்கும்.

