அடுத்த ஆண்டில் 200 கப்பல்கள் மத்திய அரசு வாங்க திட்டம்
அடுத்த ஆண்டில் 200 கப்பல்கள் மத்திய அரசு வாங்க திட்டம்
ADDED : டிச 13, 2025 01:14 AM

சென்னை 'சுய சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், 200 புதிய கப்பல்களை, அடுத்த ஆண்டு இறுதிக்குள் வாங்க, இந்திய கப்பல் கழகம் முடிவு செய்துள்ளது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில், மொத்தம் 142 கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இதில், 110 பெரிய ரக கப்பல்கள், கச்சா எண்ணெய், கன்டெய்னர்களை கையாள, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மற்ற கப்பல்கள் பயணியர், சுற்றுலா கப்பல்களாக இயக்கப்படுகின்றன. கடல்சார் வணிகத்தில், கப்பல் போக்குவரத்து துறையை மேம்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து, நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அடுத்த ஆண்டு இறுதிக்குள், 200 புதிய கப்பல்களை, இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, இந்தியாவில் கட்டப்படும், 26 புதிய கப்பல்களுக்கு, மத்திய அரசு 19,820 கோடி ரூபாய் விடுவிக்க முடிவெடுத்துள்ளது.
இதில், நான்கு ஆயில் டேங்கர் கப்பல்களும் அடங்கும். மற்ற கப்பல்களும் படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கடல்சார் வளர்ச்சியில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
